முகவுரை
தமிழ் கெழுமிய நல்லுலகில் வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள் தனிச்சிறப்பிடம் பெற்றவர். திருநெல்வேலியில் பிறந்து தமிழ்நாடெங்கும் தேவார மூவரை ஒப்பத் தலந்தோறும் சென்று பாடிப் பரவியவர். சமயபேதங்கடந்த சமயாதீதத்தை நிறுவியவர். கௌமார நெறியின் கொள்கையை வரையறுத்து வகுத்தவர். புதிய வகை இலக்கணமும் இசைப்பாக்களும், இலக்கிய வகைகளின் பெருக்கமும் தமிழ்மொழிக்குச் சுவாமிகள் அளித்த கொடை. பெண் விடுதலையும் தேச விடுதலையும் பாடிய சமயத் துறவி. முருகதாசர், திருப்புகழ்ச்சாமி, வண்ணச்சரபர் எனப்பலவாறு போற்றப்படும் சுவாமிகளின் சமயத்தமிழ்ப் பங்களிப்பை எல்லோருக்கும் கொண்டு செல்லும் எளிய முயற்சியே இந்தத் தளம்.
இப்பணியில் எங்கள் ஆர்வத்தைத் தூண்டி வழிநடத்துபவரும் தண்டபாணி சுவாமிகளின் புகழைப் பரப்பி அவர் வழியில் சமயப் பணியாற்றி வருபவருமான சிரவையாதீன குருமகாசன்னிதானத்திற்கு எங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வண்ணச்சரபம் மரபில்வந்து சுவாமிகளின் புகழைப் பரப்பிவரும் சுவாமிகளின் கொள்ளுப்பெயரர் திருவாமாத்தூர், கௌமார மடாலயம் தி.மு.தண்டபாணி ஐயா அவர்களுக்கும் எங்கள் நன்றி உரியது.
சுவாமிகளின் இலக்கிய, இலக்கணப் பணிகளைத் தமிழன்பர்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்ட எங்களை குருவருளும் தெய்வத் திருவருளும் வழிநடத்தும் என்று உளமாறக் கொண்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். அன்பர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கி இப்பணியில் எமக்கு ஊக்கம் தர வேண்டுகின்றோம்.
திருப்புகழ்ச் சுவாமிகள் வரலாறு
திருநெல்வேலியில் சைவ வேளாள மரபினராகிய செந்தினாயகம் பிள்ளை என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் நெற்கட்டும்செவ்வல் ஜமீனில் தானாபதியாக இருந்தார். இவருடைய மனைவியார் பேச்சிமுத்து அம்மையார். இவர்களின் மூதல் மைந்தனாக 28-11-1839 அன்று நம் ௬வாமிகள் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சங்கரலிங்கம் எனப் பெயர் சூட்டினர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரபுத்திர பிள்ளை எனத் தம்பி ஒருவரும் பிறந்தார்.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்ட சுவாமிகள் கல்வியில் ஊக்கமுடையவராக இருந்தார். இவருடைய ஏழாவது வயதில் தந்தையார் காலமானார். மந்திரசித்தி கைவரப் பெற்ற சீதாராம நாயுடு என்பவர் தந்தையாரின் நண்பர். அவர் நம் ௬வாமிகளுக்கு மிக்க இளமையிலேயே விநாயக, இலட்சுமி, ஆறெழுத்து மந்திரங்களை முறைப்படி உபதேசித்துச் செப, பூசை முறைகளைக் கற்பித்தார். இவர் அவற்றைத் தவறாமல் கடைப்பிடித்துவந்தார்.
முழு வரலாறு படிக்க
அமைப்பாளர்கள்: